காஞ்சிபுரம் அத்தி வரதரின் வரலாறு:
ஆயிரம் கோயில்களின் நகரமான காஞ்சியில் இருக்கின்ற புகழ் பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று தான் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில். புராணங்களின் படி பிரம்ம தேவரால் உருவாக்கப்பட்டவர் அத்திவரதர். அவர்தான்திருக்குளத்தில் வாசம் செய்வதுடன், 40 வருடங்களுக்கு ஒரு முறை வெளியில் எழுந்தருளி பக்தர்களுக்கு திவ்ய தரிசனம் தருகிறார்.
தற்போதைய காஞ்சிபுரம் என்றழைக்கப்படும் அத்திவனத்தில் அஸ்வமேத யாகம் நடத்த முடிவு செய்தார் பிரம்மதேவன். அந்த யாகத்திற்கு தன் மனைவியாகிய சரஸ்வதியை அழைக்கவில்லை பிரம்ம தேவர். இதனால் கோபம் கொண்ட சரஸ்வதி, யாகத்தை தடை செய்ய அசுரர்களின் உதவியோடு வேகவதி ஆறாக மாறி வெள்ளப்பெருக்கெடுத்து வந்தாள். இந்நிலையில், யாகத்தை காப்பதற்காக யாகத்தீயில் இருந்து திருமாள் தோன்றி வேகவதி நதிக்கு நடுவே சயனக்கோலம் பூண்டார். இதனால் வெட்கிய சரஸ்வதி, தன் பாதையை மாற்றிக்கொண்டாள். பிறகு காயத்ரி, சாவித்ரிஏ துணையுடன் பிரம்ம தேவன் தன் யாகத்தை முடித்தார் என்கிறது புராணம். யாகத்தீயிலிருந்து எழுந்தருளியதால் திருமாலின் தேகம் உஷ்ணத்தால் பால்படுத்தபட்டுவிட்டது. இதனால் தன்னை ஆனந்த தீர்த்தத்தில் விட்டுவிட்டு பழைய சீவரத்தில் உள்ள சிலையை பிரதிர்ஷ்டை செய்யுமாறு திருமால் அசரீரி மூலம் கூறியருளினார்.
தன் யாகத்தை காத்தருளிய பெருமாளின் திருவடிவத்தை தேவலோக சிற்பி விஸ்வகர்மாவைக்கொண்டு அத்திமரத்தில் வடிவமைத்தார் பிரம்ம தேவர். இப்படித்தான் அத்தி வரதர் மண்ணுலகில் எழுந்தருளினார். வேள்வித்தீ வெப்பத்தை குளிர்விப்பதற்காக அனந்த புஸ்கர தீர்த்தத்தில் புகுந்த திருமாள் 40 வருடங்களுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஐதீகம் பின்பற்றப்படுகிறது.
மேலும் தென்னகத்தின் மீது இஸ்லாமிய படையெடுப்பு நடைபெற்ற காலத்தில் அத்தி வரதர் சிலை குளத்தில் போட்டு மறைக்கப்பட்டதாகவும், 40 ஆண்டு கால இடைவெளி காலத்தில் குளத்திலிருந்து அத்திவரதர் சிலை கிடைத்ததால் அத்தி வரதருக்கு பூஜை மற்றும் வழிபாடுகள் செய்து மீண்டும் குளத்தில் போட்டு ஒவ்வொரு 40 வருடம் கழித்தும் குளத்திலிருந்து வெளியே எடுத்து சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் செய்யும் வைபவத்தை பின்பற்றத் தொடங்கினர். கடந்த நூற்றாண்டில் 1939 மற்றும் 1979 ஆம் ஆண்டுகளில் அத்திவரதர் சிலை குளத்திலிருந்து வெளியில் எடுத்து பூஜைகள் செய்யப்பட்டன.
அந்த வகையில் 1979 ஆம் ஆண்டிற்கு பிறகு 40 ஆண்டுகால இடைவெளிக்குப் பின்பு கடந்த ஜூன் 28-ஆம் தேதி அத்திவரதர் குளத்தில் இருந்து வெளியே எடுக்கும் வைபவம் நடைபெற்றது. ஜூலை மாதம் 1 தேதி முதல் ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இருக்கும் வசந்த மண்டபத்தில் அத்திவரதர் திருமேனிக்கு தினமும் நித்ய பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படவுள்ளது. 48 நாட்களுக்கு பிறகு விடையார்த்தி பூஜைகள் செய்யப்பட்டு அத்தி வரதர் மீண்டும் கோயில் குளத்தில் இறக்கப்படுவார். இதன் பிறகு 2059 மற்றும் 2099 ஆம் ஆண்டுகளில் மட்டுமே இந்த நூற்றாண்டில் காஞ்சி அத்தி வரதர் குளத்தில் இருந்து வெளிவந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார்.!
அனந்த ஸரசுக்குள் அத்திவரதர் ஏன்?
வரதராஜப் பெருமாளை உருவமாக கண்டு பிரம்மித்த பிரம்மன். அதே உருவத்தை அத்தி மரத்தில் உருவாக்கி பிரதிஷ்டை செய்து பூஜித்ததை எண்ணி மகிழ்ச்சி கொள்ளாத நாளே இல்லை. அந்த மன சந்தோஷத்தின் பால் மீண்டும் சத்திய விரத க்ஷேத்திரம்(காஞ்சிபுரம்) வந்தார் பிரம்மன். அத்தி வரதர் முன் தன் மனநிறைவின் காரணமாக யாகம் ஒன்றை செய்தார்.அந்த யாகத்தில் உருவான தீச்சுடர், அத்தி வரதப் பெருமாளின் மேல் பட்டுவிட்டது. அதைக் கண்டு அதிர்ந்து போனார் பிரம்மா. “வரதா! உனது கருணையால் எனது யாகசாலையில் அக்னிக்கு நடுவே தோன்றிக் காட்சியளித்து எனக்கு அருள்புரிந்தாய். ஆனால் இன்று எனது கவனக் குறைவால் உன் திருமேனி இப்படி ஆகிவிட்டதே!” என்று வருந்தினார். .
அப்போது பிரம்மாவிடம் அத்தி வரதர், “பிரம்மா! திருமேனியில் (பின்னப்பட்டு) குறைவு கொண்டு விக்கிரஹமாக இவ்விடம் நின்றருள்வது நன்றன்று. மேலும் யாகத்தீயால் ஏற்பட்ட சூட்டைத் தணித்துக் கொள்ள கோயிலின் நூற்றுக்கால் மண்டபத்துக்கு வடக்கே உள்ள அனந்தஸரஸ் என்னும் பொய்கைக்குள் இருக்கும் நீராழி மண்டபத்துக்குத் தெற்கே விமானத்துடன் கூடிய நாலுகால் மண்டபம் ஒன்று உள்ளது. அந்த நாலுகால் மண்டபத்துக்குள் என்னை வைத்துவிடு. அந்தப் பொய்கைக்குள்ளே நான் இளைப்பாறுகிறேன்!” என்று கூறினார். .
‘‘நான் செய்த ரூபத்தை நானே பார்க்க முடியாமல் செய்து விட்டேனே பகவானே!’’ என்று கூறிய பிரம்மனிடம், ‘‘வருத்தம் கொள்ளாதே ஆண்டுகள் நாற்பது முடிந்ததும் என்னை எப்படி வைத்தாயோ அப்படியே எடுத்து வசந்த மண்டபத்தில் வைத்து பூஜித்துக்கொள். ஒரு மண்டலத்துக்கு மேல் அவ்விடம் வைக்காதே’’ என்று கூறினார். அத்தி வரதரின் ஆணையை ஏற்ற பிரம்மா, அத்தி வரதரை ஒரு வெள்ளிப்பேழையில் வைத்து, அனந்த சரஸ் பொய்கையிலுள்ள அந்த நாலுகால் மண்டபத்துக்குள்ளே எழுந்தருளப் பண்ணினார். அத்தி வரதர் அவ்விடம் வாசம் கொள்வதால் எந்தக் காலத்திலும் அந்தப் பொய்கையிலுள்ள நீர் வற்றியதே இல்லை. .
வரதராஜப் பெருமாள் கோயில் இப்போது இருக்குமிடம் முன்னர் அத்திமரங்கள் சூழ்ந்த யானை வடிவான மலையாக இருந்தது. இதனால் அத்தி மரங்கள் சூழ்ந்த மலை(கிரி) என்பதால் இத்தலம் அத்திகிரி என்றழைக்கப்பட்டது. இதன் காரணமாக இவ்விடம் எழுந்தருளிய வரதராஜ பெருமாளுக்கு அத்திகிரி வரதராஜர் என்ற நாமம் உருவானது. அதுவே அத்தி வரதர் என சுருங்கலாயிற்று. .
இவ்வாறு அனந்த சரஸ்ஸுக்குள் சென்ற அத்தி வரதர், நாற்பது வருடங்களுக்கு ஒருமுறை தான் வெளியே வந்து அடியார்களுக்கு அருள்பாலிப்பதாக பிரம்மாவுக்கு வாக்களித்தார். அதன்படி நாற்பது வருடங்களுக்கு ஒருமுறை வெளியே வரும் அத்தி வரதர், 48 நாட்களுக்கு வரதராஜப் பெருமாள் கோவில் வசந்த மண்டபத்திலே எழுந்தருளியிருப்பார். 24 நாட்கள் சயனத்திருக்கோலத்திலும், 24 நாட்கள் நின்ற திருக்கோலத்திலும் காட்சி தருவார். 48 நாட்களுக்குப் பின் மீண்டும் அனந்த சரஸ் பொய்கைக்குள்ளே சென்றுவிடுவார்.